திருவாரூர்: திருவாரூரில் இன்று (மார்ச் 21) தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சைவ சமய தலைமைப் பீடங்களில் முதன்மையான திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது.
முன்னதாக காலை 5.30 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்படும். தொடர்ந்து, ஆழித் தேரோட்டம் நடைபெறும். ஆழித் தேரின் பின்னால், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுத்துச் செல்லப்படும். ஆழித் தேரோட்டத்துக்காக, தியாகராஜ சுவாமி நேற்று இரவு ஆழித் தேரில் எழுந்தருளினார்.
விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், மன்னார்குடி, கும்பகோணம்,மயிலாடுதுறை, நாகை, திருத்துறைப்பூண்டி வழித்தடங்களில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று மாலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு காலை 8 மணியளவில் புறப்பட்ட ஆழித் தேர், மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நடப்பாண்டு தேர்தல் கட்டுப்பாடுகள் உள்ளதாலும், வெயில் தாக்கம் அதிகரித்திருப்பதாலும், தேரோட்டத்தை விரைவாக நடத்தி முடிக்க வேண்டுமெனவும், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் எனவும்பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.