இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் வந்த சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவா மிகளை வரவேற்கும் பக்தர்கள். 
ஆன்மிகம்

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் 2 ஆண்டுக்கு பிறகு காஞ்சிபுரம் வந்தடைந்தார்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விஜய யாத்திரை மேற்கொண்ட சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவரை மடத்தின் நிர்வாகிகளும், பக்தர்களும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டார். இவர் தமிழ்நாட்டில் ராமேசுவரம், ஆந்திரா, தெலங்கானா, காசி, உத்தர பிரசேதம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு விஜயம் செய்தார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிலும் பங்கேற்றார்.

ஸ்ரீசைலத்தில் ஜோதிர்லிங்க கோயிலான மல்லிகார்ஜுன சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையும் நடத்தினார். திருப்பதியில் சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்து அதன் தொடர்ச்சியாக விஜய யாத்திரை புரிந்து நேற்று காஞ்சிபுரம் வந்தடைந்தார். சுவாமிகள் காஞ்சிபுரம் வந்ததையொட்டி சர்வதீர்த்த குளம் அருகே மேள, தாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க அவரை பக்தர்கள் வரவேற்றனர்.

முதலில் திறந்த காரில் வந்த அவருக்கு சர்வதீர்த்த குளம் - தவளகிரீஸ்வரர் கோயில் அருகே பூர்ணகும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், மடத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் இளைஞர்கள் நடத்தினர். சுவாமிகளின் வருகையையொட்டி அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடியதால் காஞ்சிபுரம்-திருப்பதி சாலை, காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் சர்வதீர்த்த குளத்தில் இருந்து அவர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அவர் செல்லும் வழியில் பக்தர்கள் கூடி நின்று வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் மயிலாட்டம், கோலாட்டம் முதலியவற்றை நடத்தியவாறு பக்தர்கள் சென்றனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக வந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பின்னர் சங்கர மடம் அழைத்துச் செல்லப்பட்டார். காவல் துறையினர் ஆங்காங்கே போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், வேலூர் எம்.எஸ்.சரவணன், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் வரவேற்பு கமிட்டி தலைவர் டி.கணேஷ், காமாட்சி அம்மன் கோயில் மூத்த அர்ச்சகர் ஸ்தானிகம் நடராஜ சாஸ்திரி, ராணிப்பேட்டை ஜெ.கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT