சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் அதிசிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும்பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, கோயிலின் 4 மாடவீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில்இருந்து வருகை தருவர்.
அந்தவகையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனிபெருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது, கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகர்மற்றும் அம்பாள் ஆகியோர் கோயில் சந்நிதியில் இருந்து வெளியே வந்து அருள்பாலித்தனர்.
விழாவின் முதல் நாளில் பவளக்கால் விமானம் மூலம் கபாலீஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பின்னர், அம்மை மயில் வடிவில் காட்சிதருதல் நிகழ்ச்சியும், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகர் வீதியுலா நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று, இறைவன் அதிகார நந்தியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 22-ம்தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து 23-ல் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வீதியுலாவருதல், மார்ச் 25-ல் திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. முன்னதாக, மார்ச் 20-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சியும் நடைபெறவுள்ளது.
மார்ச்26-ம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி உற்சவமும் நடைபெற்று, மார்ச் 27-ல் திருமுழுக்குடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவின் 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவில் ஐந்திரு மேனிகள் வீதி உலா நடக்கிறது.
தேரோட்டம் அன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது.