திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 100 ஆண்டுகள் பாரம்பரிய மறிச்சி கட்டி பொங்கல் விழாவை கிராம மக்கள் கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டை மேலையூர் கிராமம் உள்ளது. இங்கு 100 ஆண்டுகளாக பாரம்பரியமாக மாசி மாதத்தில் மறிச்சி கட்டி பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மார்ச் 12 இரவு அஞ்சாத கண்ட விநாயகர் கோயில் ஊருணியில் கிராம மக்கள் வழிபாடு செய்தனர். பின்னர் கோயில் பூசாரி குளத்தில் இருந்து நீர் எடுத்தும், மண் கரகத்தை சுமந்தும், அம்மன் குடில் அமைக்கப்பட்ட இடத்துக்கு வந்தார்.
அங்கு கலயத்தை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து விளக்கு ஏற்றி, அதில் இருந்து நெருப்பு எடுத்து பொங்கல் வைக்க தொடங்கினர். பொங்கல் பானைகள் அனைத்தும் தெருவை மறித்து வைக்கப்பட்டன. பொங்கல் வைத்ததும் கோழி, சேவல் பலி கொடுத்தனர். அவற்றை உலக நாயகி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று அம்மனுக்கு படையல் வைத்தனர். தொடர்ந்து கிடா வெட்டி அசைவ விருந்து நடைபெற்றது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு காலரா வேகமாக பரவியது. இதைத் தடுக்க எங்களது முன்னோர் தெருவை மறித்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதையே நாங்களும் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறோம். மாசி மாதத்தில் தொடர்ந்து 3 செவ்வாய்க் கிழமைகளிலும் பொங்கல் வைப்போம். 3-வது செவ்வாயில் வைக்கப்படும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவோம்’’ என்று கூறினர்.