நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் நிறைவு நாளான நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடைவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் நாள் திருவிழாவில் இரவு 12 மணிக்கு வலியபடுக்கை நடைபெற்றது. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் தினந்தோறும் அங்குள்ள பொங்காலை மண்டபத்தில் பொங்கலிட்டு அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் பொங்கலிட்டனர். 9-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி நடைபெற்றது.
கோயில் வளாகத்தை சுற்றி பாரம்பரியம் மிக்க பெரிய சக்கர தீவட்டி பவனி நடைபெற்றது. விழா நிறைவு நாளான நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மண்டைக்காடு மட்டுமின்றி சுற்றுப்புறப் பகுதிகள், மண்டைக்காடு செல்லும் வழித்தடமான மணவாளக்குறிச்சி, குளச்சல், திங்கள் நகர் பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்குபூஜை நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது.
பலவகை உணவு பதார்த்தங்கள் தயார் செய்யப்பட்டு அங்குள்ள சாஸ்தா கோயில் அருகில் இருந்து ஒடுக்கு பூஜை பொருட்கள் பவனியாக பகவதியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. உணவு பதார்த்தங்களை மண்பானையில் வைத்து வெள்ளை துணியால் மூடி பூசாரிகள் எடுத்துச் சென்றனர். பின்னர் பகவதியம்மன் முன்பு அவற்றை படைத்து ஒடுக்கு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டன.