மாசி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்வதற்காக தாணிப்பாறை அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள். 
ஆன்மிகம்

சதுரகிரியில் மாசி மாத அமாவாசை வழிபாடு: 10,000+ பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

வத்திராயிருப்பு: மாசி மாத அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை வழிபாட்டுக்காக மார்ச் 8 முதல் 11-ம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மகா சிவ ராத்திரியையொட்டி 9 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாசி அமாவாசையை யொட்டி சதுரகிரி அடிவாரமான தாணிப் பாறை நுழைவு வாயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அமாவாசையை யொட்டி இரவில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு மற்றும் 18 சித்தர்களுக்கும் 18 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சதுரகிரி மலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் ராம கிருஷ்ணன், அறங்காவலர் ராஜா பெரியசாமி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT