விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான மயானக் கொள்ளை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழா நேற்று முன்தினம் காலை கோபால விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. நேற்று மயானக் கொள்ளை நிகழ்வையொட்டி காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிம்ம வாகனத்தில் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்த பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த விளை பொருட்கள், நாணயங்கள், கோழி ஆகியவற்றை வாரி இறைத்து,நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
சில திருநங்கைகள் ஆக்ரோஷத்துடன் உயிருடன் உள்ள கோழியைவாயில் கடித்தபடி அம்மனுக்கு முன் ஆடியபடி வந்தனர். மயானத்தில் இருந்து அம்மன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய நிகழ்வான தீ மிதிவிழா வரும் 12-ம் தேதி மாலையிலும், தேரோட்டம் வரும் 14-ம்தேதி மாலையிலும் நடைபெறுகிறது.