வேலூர்: வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் பலர் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பல்வேறு கடவுள்களின் வேடங்களில் சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மகாசிவராத்திரி விழாவுக்கு மறுநாள் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் கொண்டாடப்படும் விழா பிரசித்திப் பெற்றது.
இந்த திருவிழாவையொட்டி வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலையை ஊர்வலமாக பாலாற்றங்கரைக்கு எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் காளி, முருகன், சிவன், விநாயகர், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள்களின் வேடமிட்டு சென்றனர்.
ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க இளைஞர்களும், சிறுவர்களும் ஆடிப்பாடி சென்றனர். ஆண்கள் பலர் பெண்கள் வேடம் அணிந்தும், சிலர் எலும்பு துண்டுகளை வாயில் கவ்வியபடியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும், பாலாற்றங்கரை மயானத்தில் உள்ள தங்களது முன்னோர் சமாதிகளுக்கு சென்று படையலிட்டு வழிபட்டனர். பாலாற்றங்கரையை அடைந்ததும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையுடன் பக்தர்கள் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வேலூரில் நடைபெற்ற மயானக்கொள்ளை விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் மாநகரில் மட்டும் 500 காவலர்களும், மாவட்டம் முழுவதும் 1,200 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.