ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தர்ப்பணம் செய்ய கட்டணம் வசூலிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது, என்ற இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட அறிவிப்பு நேற்று திரும்பப் பெறப்பட்டது.
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால், தினந்தோறும் ஆயிரக் கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் செய்கின்றனர். இந்த பூஜைகளை நடத்தும் புரோகிதர்களுக்கு பொது மக்கள் தாங்கள் விரும்பியதை தட்சணையாகக் கொடுக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 29-ம் தேதி ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலின் இணை ஆணையர் செ.சிவ ராம் குமார் நாளிதழ்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான அக்னி தீர்த்தக் கடற்கரை அருகில் உள்ள இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய தர்ப்பணத்துக்கு ரூ.200 ( ரூ.120 கோயில் பங்கு, ரூ.80 புரோகிதர் பங்கு ), பிண்ட பூஜைக்கு ரூ.400 ( ரூ. 240 கோயில் பங்கு, ரூ.160 புரோகிதர் பங்கு ) என கட்டணச் சீட்டுகள் நடைமுறைப் படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து ஆட்சேபம் எதுவுமிருப்பின் பொது மக்கள் தங்களது ஆட்சேபத்தை வரும் 20-ம் தேதிக்குள் தெரிவிக்கும் படியும், அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது, என நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.