தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில், நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் கிடைத்த நன்னாளை ( மாசி விசாகம் ) போற்றும் வகையில் ஆண்டு தோறும் மாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
9-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி நம்மாழ்வார் காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 7.45 மணியளவில் ஆழ்வார் திருநகரி எம் பெருமானார் ஜீயர், ஆச்சாரிய குருக்கள் மற்றும் பொது மக்கள் வடம் பிடித்து இழுக்க ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் நான்கு ரத வீதிகள் வழியாகதேர் பவனி வந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாசான முத்து, குற்றவியல் நீதிபதி மகராஜன், கோயில் செயல் அதிகாரி தமிழ்ச் செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜம் ( எ) கணேசன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10-ம் நாளான இன்று ( பிப்.29 ) இரவு சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை ( மார்ச் 1 ) இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மார்ச் 2-ம் தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.