ஆன்மிகம்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில், பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி மாத பூச்சொரிதல் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நேற்று நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், காலை மூலவர் அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பூத்தட்டுகளுடன் வந்து உற்சவர் அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். மார்ச் 10-ம் தேதி மாலை சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து, மாசி - பங்குனி திருவிழா மார்ச் 12-ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர், காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மார்ச் 19-ம் தேதி இரவு 7 மணிக்கு முத்தா லம்மன் கோயிலில் இருந்து கோயில் கரகம், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 20-ம் தேதி காவடி, பூக்குழி இறங்குதல் நடைபெறும். மேலும், அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். மார்ச் 21-ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மார்ச் 22-ம் தேதி இரவு 7 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT