திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வர்த்தகர் சங்க மண்டகப்படியையொட டி ஊர்வலமாக வந்ததேர். 
ஆன்மிகம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா - பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நேற்று காலை நடைபெற்றது. இரவு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடங்கி யவுடன், பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்கினி சட்டி, பால்குடம் எடுத்தல், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.

பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றியும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நேற்று காலை நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் திரளானோர் மஞ்சள் ஆடை உடுத்தி, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி அம்மனை வேண்டியபடி நடந்து சென்றனர்.

சிலர் தங்களது குழந்தைகளுடனும், அக்கினி சட்டியை ஏந்தியபடியும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, இரவு தேரோட்டம் நடைபெற்றது.

திருவிழாவில் மஞ்சள் ஆடை அணிந்து
பூக்குழி இறங்கிய பக்தர்கள்.

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தேரேற்றம் நடந்தது. அம்மன் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

திண்டுக்கல் நகர் மட்டுமின்றி, சுற்றுப் புற கிராம மக்களும் ஏராளமானோர் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர். மாசித் திருவிழாவின் தொடர்ச்சியாக, இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு தசாவதாரம் நடைபெறுகிறது.

பிப்.25-ம் தேதி மஞ்சள் நீராடுதலும், பிப்.26-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், பிப்.27-ம் தேதி மாலையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதையடுத்து, திருவிழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT