பழநி அடுத்த பெரியகலையம்புத்தூரில் உள்ள ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்த முஸ்லிம்கள். 
ஆன்மிகம்

பழநி அருகே கோயில் கும்பாபிஷேகத்துக்கு முஸ்லிம்கள் சீர்வரிசை

செய்திப்பிரிவு

பழநி: பழநி அருகே பெரியகலையம் புத்தூரில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக முஸ்லிம்கள் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர்.

பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பழநி, நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி, பெரியகலையம்புத்தூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்புகள், பீரோ மற்றும் ரூ.5,000 ரொக்கம் ஆகியவற்றை தாம்பூலத்தில் வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி முஸ்லிம்கள் கூறுகையில், எங்கள் ஊரில் மத பாகுபாடின்றி ஒற்றுமையாக வாழ்கிறோம். பள்ளி வாசலில் நிகழ்ச்சி நடந்தால், இந்துக்கள் கலந்துகொள்வார்கள். நாங்களும் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோம். கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஜமாத் சார்பில் சீர்வரிசை பொருட்களை வழங்கி கலந்து கொண்டோம் என்றனர்.

SCROLL FOR NEXT