நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தை முன்னிட்டு நேற்று சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதன் பின்னர் 3-வது நாளில் இயேசு உயிர்த்தெழுந்த தினம்ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதற்குமுன்பு வரும் 40 நாட்களையும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நேற்றுகாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, பிரார்த்தனை செய்தனர்.
பின்னர், கிறிஸ்தவர்களின் நெற்றியில், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், பங்குத்தந்தை அற்புதராஜ் அடிகளார், உதவி பங்குத் தந்தை டேவிட்தன்ராஜ் உள்ளிட்டோர் சாம்பல்பூசி, 40 நாட்கள் தவக்காலத்தை தொடங்கிவைத்தனர். முன்னதாக, உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும் சிறப்புபிரார்த்தனை செய்யப்பட்டது.