ஈரோடு: அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமரைத் தரிசிக்க, ஈரோட்டில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்தனர்.
அயோத்தி ராமர் கோயிலில், கடந்த மாதம் 22-ம் தேதி, கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் பிராண பிரதிஷ்டை நடந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து அயோத்தி சென்று ராமரைத் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு சலுகை கட்டணத்தில் பாஜக சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 8- தேதி இரவு கோவையில் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், ஈரோட்டில் இருந்து 191 பேர் பயணித்தனர். அதேபோல், கடந்த 10-ம் தேதி திருப்பூரில் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், 339 பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் (11-ம் தேதி) இரவு ஈரோட்டில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதற்கென பாஜக நிர்வாகிகள் சார்பில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஈரோட்டில் இருந்து அயோத்தி சென்று, திரும்புதல், உணவு உள்ளிட்டவைகளுக்காக தலா ரூ.2,400 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த பக்தர்கள் நேற்று முன் தினம் இரவு ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தனர். பாஜக நிர்வாகிகள் அவர்களை முறைப்படுத்தி, ஒவ்வொரு பக்தருக்கும், அவர்களின் பெயர், விவரம், ஆதார் எண், ரயில் எண், உதவி எண் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அடையாள அட்டை மற்றும் பாசிகள் கோர்க்கப்பட்ட மாலையை வழங்கினர்.
பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு சென்ற பின், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், குளிர் தாங்கும் வகையில் போர்வை மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டன.
அயோத்தி செல்லும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு முழுமையாக சோதிக்கப்பட்டன. பக்தர்களின் தேவைகளைக் கவனிக்க அயோத்தி சிறப்பு ரயிலின் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு பாஜக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அயோத்தி சென்று திரும்பும் வரை மூன்று வேளை உணவு, டீ மற்றும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் இருந்து நேற்று முன் தினம் (11-ம் தேதி) புறப்பட்ட இந்த ரயிலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்தனர். இந்த ரயிலானது அயோத்திக்கு 14-ம் தேதி அதிகாலை சென்றடையவுள்ளது. ராமரை தரிசிக்க ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டு, 15-ம் தேதி மதியம் அயோத்தியில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு, 17 -ம் தேதி ஈரோடு வந்தடைகிறது.
அயோத்தி செல்லும் சிறப்பு ரயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி சிறப்பு ரயில் பயணத்திற்கான ஏற்பாடுகளை, பாஜக ஈரோடு மாவட்டத் தலைவர் வேதானந்தம், துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட் டோர் செய்திருந்தனர்.