தூத்துக்குடி: திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 10-ம் நாளான நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதைமுன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 6.10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர் ரதவீதிகள் வழியாக பவனி வந்து மீண்டும் 7 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது 'ஓம் காளி, ஜெய் காளி' என பக்தர்கள் கோஷமிட்டனர்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.