தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் பிப்.11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ள நிலையில், அதைக் கண்காணிக்க தேரோடும் வீதிகளில் சிசிடிவி கேமராக்களை போலீஸார் பொருத்தி உள்ளனர்.
தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில், சிவகங்கை சமஸ் தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறும். தேர்வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையாலும், கும்பாபிஷேக திருப்பணிகள், தேர் பழுதானது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து தேரோட்டம் பல ஆண்டுகளாக தடைப்பட்டது.
இதற்கிடையே, 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் செய்யப்பட்டது. ஆனால், தேர் வெள்ளோட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஜன. 21-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், அப்போது பிரதமர் மோடி ராமேசுவரம் வந்ததால், தேர் வெள்ளோட்டம் பிப்.11 காலை 6 மணிக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான முன்னேற்பாடு பணி களை போலீஸார், வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தேரோடும் வீதிகளில் 6 இடங்களில் 18 சிசிடிவி கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுல்ளன. தேரோடும் வீதிகளை சுற்றிலும் 2 கி.மீ. தூரத்துக்கு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேரை வடம் பிடித்து இந்து சமய அறநிலையத் துறை, தேவஸ்தான ஊழியர்கள் மட்டுமே இழுத்துச் செல்ல உள்ளனர். மற்றவர்கள் தடுப்பு வேலிகளுக்கு வெளியே நின்று தேர் வெள்ளோட்டத்தை பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.