ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருடா பிஷேக விழா யாக சாலை பூஜைகளுடன் நேற்று தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 2016-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில் ஆண்டுதோறும் வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று மஹா சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது. திருமுக் குளத்தில் இருந்து கோயில் யானை மூலம் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனம் சாத்து முறை, தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.
இன்று ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு 108 கலசாபிஷேகம் மற்றும் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. நாளை ஆண்டாள் - ரெங்க மன்னாருக்கு லட்சார்ச்சனை உடன் வருடாபிஷேக விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்து ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.Spirituality