படம்: ஆ.நல்லசிவன் 
ஆன்மிகம்

பொள்ளாச்சியில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

பழநி: தைப் பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயிலுக்கு பொள்ளாச்சி பணிக்கம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி இரட்டை மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்தனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.19-ம்தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜன.25-ம் தேதி நடைபெற்றது. தைப் பூச விழா வன்று லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தைப் பூசத் திருவிழா முடிந்த பிறகும் பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் பழநி மலைக்கோயில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி பணிக்கம்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரம்பரிய முறைப்படி 25-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் புறப்பட்டு நேற்று காலை பழநியை வந்தடைந்தனர். அவர்கள் சண்முக நதியில் புனித நீராடிவிட்டு மலைக்கோயிலுக்குச் சென்று முருகனை தரிசித்தனர். பின்னர் மீண்டும் ஊருக்குப் புறப்பட்டனர். பழநி நகருக்குள் வாகனங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட மக்கள், வரிசைகட்டிச் சென்ற மாட்டு வண்டிகளைப் பார்த்து வியந்தனர். பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இது குறித்து பணிக்கம்பட்டி பக்தர்கள் கூறியதாவது: பல நூறு ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் தைப் பூச திருவிழா முடிந்த சில நாட்களில், இரட்டை மாட்டு வண்டிகளில் வந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டி ருந்தனர். அதைக் கைவிடாமல் நாங்களும் தொடர்ந்து பின் பற்றி வருகிறோம். எத்தனை மோட்டார் வாகனங்கள் வந்தாலும் மாட்டு வண்டிக்கு ஈடாகாது. மாட்டு வண்டியில் பயணிக்கும் சுகமே தனி. ஆண்டுக்கு ஒரு முறை இப்படி மாட்டு வண்டியில் பழநிக்கு பயணிப்பதைத் தவற விடுவதில்லை, என்றனர்.

SCROLL FOR NEXT