பழநி: பழநி தைப்பூசத் திருவிழா திருஊடல் வைபவம், தெப்பத் தேர் உற்சவம் மற்றும் கொடியிறக்கு தலுடன் நேற்று நிறைவு பெற்றது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.19-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஜன. 24-ம் தேதி திருக்கல்யாணம், ஜன. 25-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. புராணத்தின்படி வள்ளியை முத்துக்குமார சுவாமி திருமணம் செய்து கொண்டதை அறிந்து கோபம் அடைந்த தெய்வானை கோயில் நடையை சாத்திக் கொண்டார்.
சுவாமி வள்ளியுடன் கோயிலுக்கு வெளியே நின்று கொண்டு, வீரபாகுவை தெய்வானையிடம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சமரசம் செய்தார். இந்நிகழ்வு ‘திருஊடல் வைபவம்’ என்ற பெயரில் நேற்று நிகழ்த்தப்பட்டது. தெய்வானை முன் தூதுப் பாடல்களை ஓதுவார் சிவ நாக ராஜன் பாடினார். சமாதானமடைந்த தெய்வானை கோயில் நடையை திறந்து சுவாமிக்கு வழிவிட, கோயிலுக்குள் நுழைந்த முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்ப உற்சவம்: நேற்று இரவு 8 மணிக்கு மேல் கோயிலையொட்டியுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.