ஆன்மிகம்

`ரங்கா, ரங்கா' கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தைத்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘ரங்கா ரங்கா’ கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர்இழுத்தனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைத்தேர் திருவிழா (பூபதி திருநாள்) இந்த ஆண்டு கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நம்பெருமாள், உத்திர வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

குறிப்பாக, 4-ம் நாளான 19-ம் தேதி தங்க கருட வாகனத்திலும், 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்கக் குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் வலம் வந்து வையாளி கண்டருளினார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, தைத்தேர் மண்டபத்துக்கு வந்தார். காலை 5.15 மணி முதல் 6 மணி வரை ரதரோஹணம் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர், காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ‘ரங்கா, ரங்கா’ கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்த தேர், காலை 10.40 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடமேற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று (ஜன. 25) சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாளை(ஜன.26) நம்பெருமாள் நான்கு உத்திர வீதிகளிலும் ஆளும் பல்லக்கில் வீதியுலா வருகிறார். அத்துடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT