ஆன்மிகம்

முதல் நண்பன் குகன்

முனைவர் எஸ்.சுந்தரம்

ராமன் வனம்புகும்போது, குகனின் ஓடத்தில் ராமன் ஏறுவதை உணர்ச்சிப் பொங்கச் சுவையாக கோஸ்வாமி துளசிதாசர் வருணித்துள்ளார். மரத்தாலான ஓடத்தைக் குகன் கொண்டு வந்து நிறுத்தினான். பின்னர் ராமனிடம்,“ ஐயனே! தங்கள் திருவடி மகிமையைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.

முன்பொரு முறை தங்கள் திருவடிகள் பட்டுத்தான், கல்லாய்க் கிடந்த ரிஷிபத்தினி அகலிகை உயிர்பெற்றெழுந்தாளாம்! இந்த மர ஓடம் கல்லைவிட வலியதா என்ன? தங்கள் பாததூளி பட்டு, இது ஏதாவது ஒன்றாக மாறிவிட்டால், எனக்கு ஓடமின்றிப் பிழைக்க வழி தெரியாது! ஆகவே தாங்கள் இதில் ஏறு முன்பாகத் தங்கள் திருவடிகளைக் கங்கை நீரால் அபிஷேகம் செய்ய அனுமதி தாருங்கள்! அதன் பின் அனைவரும் ஓடத்தில் ஏறலாம்” என்றான்.

இதைக் கேட்ட ராமன் முறுவலித்தாராம். இது சமத்காரமான பேச்சு. உண்மையில் குகனுக்கு, ராமனின் திருவடிபட்ட புனித நீரைப் பிரசாதமாக அடைய வேண்டும் என்பதே விருப்பம். எத்தகைய பாவங்களையும் போக்கி எவருக்கும் எளிதில் கிடைக்காத மோட்சத்தையே தர வல்லதல்லவா அந்தப் புனித நீர்! ஆக, மரத்தால் ஆன பெரிய தட்டு ஒன்றை இராமன் திருவடிகளுக்குக் கீழே இட்டு, கங்கை நீரைக் கொண்டு சேர்த்து அப்புனித நீரை மகாபிரசாதமாக ஏற்றான் குகன் எனத் துளசிதாசர் கூறுகிறார். இந்தப் பாதபூஜை செய்யும் பாக்கியம் நமக்குக் கூட கிடைக்கவில்லையே என்று தேவர்கள் ஆதங்கப்பட்டனராம்.

வேடர் தலைவனான குகனும் வானரத் தலைவனான சுக்ரீவனும் அரக்கர் கோமகனான விபீஷணனும் ராமபிரானின் மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களுள் ராமன், முதலில் சந்தித்து நட்புறவு கொண்டது குகனோடுதான்! தசரத புத்திரர்களாக, நால்வராய்ப் பிறந்த தாங்கள், குகனோடு ஐவரானோம் எனக்கூறி, குகனைத் தன் சகோதரன் நிலைக்கு உயர்த்தி மகிழ்ந்தார் ராமன்.

கடுமையான போரில் ராவணனை மாய்த்து வெற்றி கொண்டு, சீதையை மீட்ட ராமன் அயோத்திக்குப் பயணமானார். போரில் இறந்த அத்தனை வானர வீரர்களையும் உயிர்ப்பித்து அவர்களோடும், சீதை மற்றும் வீபீஷணன் ஆகியோரோடும், புஷ்பக விமானத்தில் கிளம்பினார்.

இடையில் அந்தந்த இடங்களைப் பற்றிச் சீதைக்கு விளக்கிச் சொல்லிக்கொண்டே வந்தார். கிஷ்கிந்தைக்கு மேலே வந்தவுடன், சீதைப்பிராட்டி அங்குள்ள வானர வீரர்களின் மனைவியரையும் முடிசூட்டு விழாவைக் கண்டு மகிழுமாறு அயோத்திக்கு அழைத்துச் செல்லலாமே என்று கூறினார். அவ்வாறே அவர்களும் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

பின்னர், ராமபிரான் வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் இறங்கியதும், முனிவர் அவரையும் மற்றவர்களையும் உபசரித்தார். அப்பொழுது, ராமன் அநுமனை நோக்கி பரதனையும் குகனையும் கண்டு, தான் திரும்பிவரும் செய்தியைச் சொல்லும்படிப் பணித்தார்.

அநுமனும் அவ்வாறே முதலில் குகனுக்கு ராமபிரான் வருகையை அறிவித்துப் பின்னர், அதிக காலம் கடத்தாமல் அங்கிருந்து கிளம்பி, பரதன் உள்ள நந்திக்கிராமத்துக்கு விரைந்து சென்று, பரதனுக்கு ராமபிரான் வருகையை அறிவித்து அவர் உயிரைக் காத்தார்.

ராமன் நந்திகிராமம் வந்ததும், அங்கே அவருக்கு பரதனால் உணர்ச்சி பொங்கத் தரப்பட்ட வரவேற்பு ராமாயணத்தில் பதிவாகியுள்ளது. முடிசூட்டு விழாவில் வந்தவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன. விசேஷமான அன்பளிப்பாக ஒரு முத்துமாலையை சீதாபிராட்டி அனுமனுக்கு அளித்தார்.

கம்ப ராமாயணத்தில் முடிசூட்டு விழாவுக்குக் குகனும் வந்ததாக குறிப்பு உள்ளது. குகனையும் அழைத்து ராமன் வெகுமதிகளை வழங்கினார். பிறகு குகன் உட்பட அனைவரும் ராமனின் ஆசி பெற்றுத் தங்களுக்குரிய இருப்பிடங்களுக்குச் சென்றனர் என்கிறார் கம்பர். ஆனால் வால்மிகி ராமாயணத்தில் இதுபற்றிய விவரமான குறிப்பேதும் இல்லை.

ராமபிரானின் தூய வரலாற்றைச் சொல்லும் ராமாயண நூல்கள் பல உள்ளன. இவை அனைத்துக்கும் மூலநூல் வால்மிகி ராமாயணமே என்றாலும், சிற்சில நிகழ்வுகளைச் சற்றே வெவ்வேறாக இந்நூல்கள் காட்டுவதும் உண்டு. ஆனாலும் இந்த நூல்கள் அனைத்துமே, பக்தி மேலீட்டாலும் இறையருளாலும் தோன்றிய நூல்களே.

நண்பனாயினும் குகனைத் தனது சகோதரனாகவே ஏற்றுக்கொண்டவன் ராமன். ஆகவே, மூலநூலில் குகன் பட்டாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டதைத் தனித்துக் குறிப்பிடாவிட்டாலும், அவ்விழாவுக்கு அநுமன் மூலம், முதலில் ராமன் அழைப்பு விடுத்ததைக் கொண்டு குகனும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவே கொள்ளலாம்.

SCROLL FOR NEXT