நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று 1 லட்சத்து 8 வடைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்றஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 7-ம் தேதி முதல் நடைபெற்றது. இப்பணிகள் நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தன.
தொடர்ந்து, வடைகளால் மாலைகள் கோர்க்கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 20-க்கும்மேற்பட்ட பட்டாச்சாரியார்கள், சுவாமிக்கு வடைகளால்ஆன மாலை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை அலங்காரம் நிறைவடைந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
நேற்று காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, 1,008 லிட்டர் பால், தயிர்,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனைத்திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குச் சுவாமி சேவை சாதித்தார். அனுமன்ஜெயந்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, நாமக்கல் நகரில் நேற்றுபோக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும்,ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.