ஈரோடு: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம்,கோபி அருகே பாரியூரில் கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 28-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி தேர்நிலை பெயர்தலைத் தொடர்ந்து, 8-ம் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வுக்காக, நேற்று முன் தினம் இரவு, சிறப்பு பூஜைக்குப்பின் குண்டம் தயார் செய்யப்பட்டது. ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று முன்தினம் முதல், குண்டம் இறங்க வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பூசாரிகள் அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு, தலைமை பூசாரி ராமானந்தம் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, குண்டம் இறங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளில், தடப்பள்ளி வாய்க்கால் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து குண்டம் இறங்கினர். ஈரோடு எஸ்பி ஜவகர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குண்டம் திருவிழாவில் இன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை (13-ம் தேதி) இரவு மலர் பல்லாக்கில் அம்மன் எழுந்தருளும் நிகழ்வும், 14-ம் தேதி கோபியில் தெப்பத்தேர் நிகழ்வும் நடக்கிறது. மஞ்சள் நீர் உற்சவத்தைத் தொடர்ந்து வரும் 20-ம் தேதி மறுபூஜை விழாவுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.