சேலம்: சேலம் கோட்டை அழகிரி நாதர் கோயிலில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 1,500 வடைமாலை மற்றும் தங்கக் கவச சாத்துபடி நிகழ்ச்சி நடந்தது.
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறப்பு, பகல் பத்து, ராபத்து உற்சவம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது மார்கழி உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில் நேற்று முன்தினம் முதல் அழகிரிநாதர் - சுந்தரவல்லி தாயார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றன.
நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு 1,500 வடை மாலை சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதல் மதியம் வரை வடை மாலை அலங்காரமும், மதியத்துக்கு மேல் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. தொடர்ந்து தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்நிகழ்வில் சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.