வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சதுரகிரி செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அமாவாசை வழிபாட்டுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகா லிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. வட கிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கார்த்திகை மாதத்தில் இருந்து பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டுக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மார்கழி மாத பிறப்பின்போது சதுரகிரி செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டபோது, ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பக்தர்கள் இரவில் மலைக் கோயிலில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் அடிவாரம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து மார்கழி மாத அமாவாசை மற்றும் பிரதோஷ வழிபாட்டுக்கு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தடையின்றி வழிபாடு செய்வதற்கு வசதியாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பாலம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.