ஆன்மிகம்

ஆண்டாள் திருப்பாவை 21 | கண்ணனுக்கு பாமாலை சூட்டுவோம்..!

கே.சுந்தரராமன்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாதுவந்துன் அடிபணியு மாப்போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

கடையேழு வள்ளல்களுள் ஒருவராக போற்றப்படும் பாரி, மக்களின் மனம் அறிந்து அவர்கள் தேவையை உணர்ந்து வாரி வழங்கி நல்லாட்சி புரிந்தவராக போற்றப்படுவார். மாரி (மழை) போல் வாரிக் கொடுத்தான் பாரி என்று கூறுவர். மன்னர்களின் கொடைத்தன்மையை சங்க இலக்கியங்கள் விரிவாக உரைக்கின்றன. அதுபோல ஆயர்பாடித் தலைவன் நந்தகோபனின் பசுக்கள் எப்போதும் பால் சுரக்கும் தன்மை உடையன. இதன் மூலம் நந்தகோபனின் செல்வ வளம் அறியப்படுகிறது.

எப்போதும் பாத்திரங்கள் நிரம்பி வழிந்தோடும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களை உடைய நந்தகோபனின் மைந்தனே! கண்ணனே! உடனே எழுவாயாக! வேதங்கள் அனைத்தும் போற்றும் வலிமை பொருந்தியவனாக இருக்கும் பத்மநாபனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பரம்பொருளே! உலகில் தோன்றிய ஒளிப்பொருளே!

உன்னை எதிர்த்த பகை அரசர்கள் அனைவரும், போரில் தோற்றபின்தான் உனக்கு புகழ்மாலை சூட்டுவர். ஆனால் பாவை நோன்பு இருப்பவர்கள் எப்போதும் உன் நினைவாகவே இருந்து உனக்கு பாமாலை சூட்டுவர். உன்னைப் போற்றிப் புகழ்வர் என்பதை நீ அறியவில்லையா? உடனே துயில் எழுவாயாக! நோன்புப் பாவையர் அனைவரும் உன் அடியார்கள். உன் திருவடிகளைப் போற்றி புகழ்ந்து உயர்வடைய நாங்கள் விழைகிறோம் என்று ஆண்டாளின் தோழிகள் கண்ணனை வேண்டுகின்றனர். இப்பாசுரம் மூலம் நந்தகோபரின் செல்வ வளம், கண்ணனின் வீரம், அவனது அருட்குணம் விளக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT