உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்!
பந்தார் விரலி, உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
ஆண்டாளின் தோழிகள், நந்தகோபன் மாளிகைக்குள் சென்று, கண்ணனுக்கு பிரியமான நப்பின்னை பிராட்டியை, கண்ணன் புகழ் பாட அழைப்பதாக இப்பாசுரம் அமைந்துள்ளது. யானைப்படை உள்ளிட்ட படைகளுடன் சென்று பகைவர்களை வீழ்த்தி, பல வெற்றிகளைக் குவித்தவர் நந்தகோபன். போரில் பின்வாங்காத தோள் வலிமை கொண்ட நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! மணம் கமழும் கூந்தலை உடையவளே!
அதிகாலை வேளையில் சேவல்கள் அனைத்து திசைகளில் இருந்தும் கூவுகின்றன. அது உனக்கு கேட்கவில்லையா? இயற்கையின் மீது விருப்பம் கொண்ட நீ, கொடிகள் படர பந்தல்களை அமைந்துள்ளாய். அப்பந்தல்களில் அமர்ந்து குயில் உள்ளிட்ட பறவைகள் குரல் எழுப்புகின்றன. அதுவும் உனக்கு கேட்கவில்லையா? பொழுது விடிந்துவிட்டது.
தோழிகளுடன் விளையாடும்போது பந்தைப் பற்றி அடிக்கும் அழகிய விரல்களைப் பெற்ற பதுமையே!
உனக்கு பிரியமான கண்ணனின் புகழ் பாட நாங்கள் அனைவரும் வந்துள்ளோம். வளையல்கள் ஒலி எழுப்ப தாமரை மலர் போன்ற உனது கைகளால் கதவைத் திறப்பாய். உறக்கத்தில் இருந்து எழுந்து, கண்ணன் புகழ் பாட, எங்களுடன் நீயும் வர வேண்டும் என்று நப்பின்னை பிராட்டியை தோழிகள் அழைக்கின்றனர். ஆயர்பாடியின் தலைவன் நந்தகோபனின் வீரமும், நப்பின்னையின் அழகும் இப்பாசுரத்தில் விளக்கப்படுகின்றன. பெருமாளின் அருள் பெற, தாயாரின் கருணை வேண்டும் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.