நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவின் 467-வது ஆண்டு கந்தூரி விழா 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நாகை அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து புறப்பட்டது. அப்போது, சாம்பிராணி சட்டி ரதம், நகரா மேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார ரதங்கள் சந்தனக்கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்துச் சென்றன. நாகை புதுப்பள்ளி தெரு, யாஹுசைன் தெரு, நூல் கடைத் தெரு, வெங்காய கடைத் தெரு, பெரிய கடைத் தெரு, சர் அகமது தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாகநடைபெற்ற சந்தனக் கூடு ஊர்வலம், நாகை அண்ணா சிலை, பொது அலுவலகச் சாலை வழியாகநாகூர் எல்லையை சென்றடைந்தது.
பின்னர், நாகூரில் உள்ள கூட்டுபாத்தியா மண்டபத்தில் பாத்தியா ஓதிய பிறகு, வாணக்காரத் தெரு,தெற்குத் தெரு, அலங்கார வாசல் வழியாகச் சென்று, அங்குள்ள பாரம்பரிய முறைக்காரர் வீட்டில்சந்தனக் குடம் கூட்டில் வைக்கப்பட்டு, பின்னர் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து, கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. நேற்று அதிகாலை சந்தனக்குடத்தை தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு ஹாஜியார் எடுத்துச் சென்றார்.
அங்கு ஆண்டவர் சமாதியில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சந்தனம் பூசினார். இதில், முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். வரும் 27-ம் தேதி இரவு 8.30 மணியளவில் குர் ஆன் ஷரீப் ஹதியா செய்து புனிதக் கொடி இறக்கப்பட்டு, சந்தனக்கூடு விழா நிறைவு பெறும். விழாவில், மாநில சிறுபான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாகை மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ், பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.