திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.40 மணிக்குசொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
முதலில் விஐபி பக்தர்கள் சுவாமியை தரிசித்த பின்னர் சொர்க்க வாசலை தரிசித்து விட்டு வெளியே வந்தனர். அதன் பின்னர், சாமானிய பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. அத்துடன் திருப்பதியில் ஏற்பாடு செய்துள்ள 9 இடங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதலே சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் நேற்று திருமலையில் குவிந்ததால், எவ்வித டோக்கன்களும் இன்றி சர்வ தரிசன வரிசையில் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆதலால், போலீஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 22-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்களை ஏன் ரத்து செய்தீர்கள்? என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர், சிறிது நேரத்தில் பக்தர்கள் சர்வ தரிசன வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதிக அளவில் விஐபிக்கள்: வைகுண்ட ஏகாதசியை யொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் விஐபி பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவஸ்தானம் விஐபி சிபாரிசு கடிதங்களை ரத்து செய்திருந்தாலும், நேரடியாக வரும் விவிஐபிக்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் சுதீர் மங்கதீவார், ஆந்திர மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜி. ஜெயராம் மற்றும் உச்ச நீதிமன்றம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான மாநில நீதிபதிகள் மற்றும் குடும்பத்தினர் என ஏராளமான விவிஐபிக்கள் வருகை தந்துள்ளனர். இதனால் அவர்களுக்கான தரிசன ஏற்பாடுகளைச் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தங்கும் இடம், தரிசன ஏற்பாடு மற்றும் பிரசாதங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சாமானிய பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, தேநீர், பால், போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது. இதனால் திருப்பதி, திருமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் உள்ளது.