யாத்திரை என்பது நாமிருக்கும் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது மட்டுமல்ல; நாமிருக்கும் நிலையிலிருந்து நாமிருக்க வேண்டிய நிலைக்குச் செல்ல வேண்டியதும் ஆகும். ஆக, புறத்தே மேற்கொள்ளும் பயணம், அகத்தேயும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எந்தக் குறிக்கோளும் இன்றி இன்பத்தை நாடித் துன்பத்தில் உழலும்போது, வாழ்க்கை அலைச்சலாக இருக்கிறது. ஏன் என்னும் கேள்வி மனத்தில் எழுந்து குடையும்போது, அலைச்சல் தேடலாகிறது. அதுதான் இலக்கு, இதுதான் பாதை என்னும் நிச்சயம் வரும்போது, தேடல் பயணமாகிறது. அலைச்சலைத் தேடலாக்கித் தேடலைப் பயணமாகக் கனியச் செய்வதே திருத்தல யாத்திரைகள். அவற்றுள் சிகரமாகக் கருதப்படுவது திருக்கயிலை யாத்திரை.
கடல் புடைத்தெழுந்ததுதான் நாம் காணும் இமயம் என்பார்கள் புவியியல் வல்லுநர்கள். அந்த இமயம்தான் இந்திய நாட்டின் அடிநாத ஆன்மிகத்துக்குத் தலைநகரமாக விளங்குகிறது. பாரதத் தாயின் திருநெற்றியில் வைரம் பதித்தாற்போல் விளங்கும் இமயமே கோயில்தான். ‘ஹிமாலயம்’ என்னும் சொல்லுக்கே ‘பனிக்கோயில்’ என்பதுதான் பொருள். பல்லாயிரக்கணக்கான மைல்கள் பரந்து கிடக்கும் இமயத் தொடரில் பற்பல திருத்தலங்கள் உண்டு. மிகப் பழமையான கேதார்நாத், பத்ரிநாத், அமர்நாத், முக்திநாத் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.அவற்றுள் திருக்கயிலைக்கு இருக்கும் சிறப்பு, அது ஆதிசிவன் உறையும் இடம் என்பது.
அதற்கப்பால், கயிலை என்பது அண்டப் பெருவெளியில் இருக்கும் ஓர் ஆன்மிக மையம். அதன் பிரதிபலிப்பே புவியில் கயிலை மலை என்ற நுண்மையான கருத்தும் உண்டு. இந்தக் கவனத்துடன் கயிலை மலையைத் தரிசிப்பவனுக்கு என்ன நேர்கிறது? அவன் உடலிலிருந்து உயிர் பிரியும் தருணத்தில், அவனுடைய ஆன்மா இந்தத் திருக்கயிலை மலையை அடைந்து, அங்கிருந்து அண்ட வெளியில் இருக்கும் கயிலைக்குச் சேர்ப்பிக்கப்பட்டு, அந்த மனிதனுக்குச் சிவகதி கிடைக்கிறது என்றே புராணங்கள் சொல்கின்றன.
‘கைலாஷ்’ என்னும் சொல் எந்த மொழியிலிருந்து வந்தது என்பதில் குழப்பம் இருக்கிறது. ஆனால், ‘கயி + லாஸ்’ என்று அதைப் பிரித்துக் கூட்டும்போது சிவனும் சக்தியும் நடனமாடும் இடம் என்று பொருள் வருகிறது. ‘லாஸ்யம்’ என்பது ஆணும் பெண்ணும் இணைந்து ஆடும் நடனவகை என்ற குறிப்பும் இருக்கிறது. பிரபஞ்சத்துக்கு ஒரு மையம் (Centre of the Universe) இருக்கிறது என்னும் கருத்து அறிவியலாளர்களிடமும் ஆன்மிக வல்லுநர்களிடமும் இருக்கிறது. அந்த மையம் ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. திருக்கயிலையைத் தரிசிக்கும்போது அந்த மையம் நம்முள்ளே தூண்டப்படுகிறது என்றும், அதன் விளைவாக நம்முடைய மனப்பாங் கிலும், ஏன் வாழ்க்கையின் சூழ்நிலைகளிலும்கூட மாற்றங்கள் நிகழ்கின்றன என்றும், ஒரு சராசரி மனிதனுக்குக்கூட முக்தியில் ஆசை வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
நேபாளம் சென்று அங்கே பசுபதிநாதரைத் தரிசித்துவிட்டு திபெத்தில் நுழைய வேண்டும். அங்கிருந்து, மைல் கணக்கில் பனிமிகுந்த ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து மானசரோவரின் கரையை அடைய வேண்டும். 15,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் அந்த ஏரியின் மையப் பகுதி 250 அடி ஆழமுள்ளது. அதற்கு ‘பிரம்ம மானஸ ஸரோவர்’ என்று பெயர். அதன் கரையிலிருந்தே கயிலை மலையின் தெற்கு முகத்தைக் காணலாம்.
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
என்னும் அப்பர் பெருமானின் பாடல் நினைவுக்கு வருகிறது. அந்தக் குளிரும் காற்றும் சொல்லில் அடக்க முடியாது. இந்தப் பயணம் கடினமாக இருப்பதற்கு இன்னுமொரு காரணம், மலை அமைந்திருக்கும் திபெத் தற்போது சீனாவின் வசமிருப்பதே. எங்கும் சீன ராணுவத்தினர் தென்படுகிறார்கள். நாம் பயணம் செய்யும் வழியெங்கும், ஏழ்மையில் வாடும் திபெத்தியர்கள் கையேந்தி நிற்பதைக் காண்பது வருத்தமாக இருக்கிறது.
திருக்கயிலை என்பது இந்துக்கள், பெளத்தர்கள், சமணர்கள், தாவோக்கள் போன்ற பல மதத்தினருக்கும் புனிதமான இடம். இந்துக்கள் மானசரோவரில் குளிக்கிறார்கள். பெளத்தர்கள் அதை அபசாரமாகக் கருதுகிறார்கள். அவர்கள் வழியெங்கும் நமஸ்காரம் செய்தபடியே தொலைவைக் கடக்கிறார்கள். அவர்களுடைய பக்தி நம்மை மலைக்க வைக்கிறது.
ஏறத்தாழ 110 கி.மீ. சுற்றளவுள்ள மானசரோவரை ஜீப்பில் சுற்றி வரலாம். அதனருகே, ராவணன் தவம் செய்த ராக்ஷஸ்தல் என்னும் ஏரி இருக்கிறது. அங்கே யாரும் செல்வதில்லை. அதன் பிறகு ‘தார்சென்’ (தர்ஷன் என்பது தார்சென் என்று திரிந்திருக்கிறது) என்னும் இடத்தை அடைகிறோம். அதுதான் அடிவார முகாம். அது 16,000 அடி உயரத்தில் இருக்கிறது. அங்கிருந்து மலையின் சிகரம் மட்டுமே தெரிகிறது.
அருகிலிருக்கும் குன்றில் (‘அஷ்டபதா’) நாங்கள் ஏறினோம். சுவாசிக்க மிகவும் சிரமமாக இருந்தது. இறந்துவிடுவேன் என்று நினைத்து, மனத்தில் ‘ஓம் நமசிவாய’ என்று நினைத்தால், அது நம் காதில் விழுமளவுக்கு ஒரு தாங்க முடியாத மெளனமாக நம் ஆன்மாவைத் தாக்குகிறது. எப்படியோ ஏறிப்போனால் அந்தக் காட்சி, ஆஹா அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை! மலையா அது? இல்லவே இல்லை. மகாதேவனே வீற்றிருந்து ‘எங்கு வந்தாய்?’ என்று கேட்பது போலவே இருக்கிறது. அடிமனம் வெடித்துப் பொங்கும் கண்ணீர், நம் வியர்வைத் துவாரங்கள் வழியேகூட வரும்போலும்! அப்படி ஒரு நெகிழ்ச்சி ஏற்படுகிறது.
அண்ணாமலையைக் கிரிவலம் வருவதுபோல் திருக்கயிலையையும் சுற்றி வருகிறார்கள். 54 கி.மீ. சுற்றளவுள்ள இந்த இரண்டரை நாள் பயணம் மிகவும் கடினமானது. இதில் 19,000 அடி உயரத்தைத் தொடுகிறோம்!
திரும்பி வரும் வழியில், மானசரோவரிலிருந்து நீரை எடுத்துக்கொண்டு வந்தோம். வழிநெடுக மழையால் மலைச்சரிவுகள் ஏற்பட்டுப் பாதை சேறும் பாறைகளுமாக இருந்தது. அவற்றில் சிலவற்றை நாங்களே இறங்கி அகற்றிவிட்டு சேறும் சகதியுமாக காத்மண்டுவில் விமானத்தில் ஏறியது மறக்க முடியாதது!
வீடு வந்துசேர்ந்த பிறகு, ‘வானத்திலிருந்து ஒளிக்கற்றைகளாகத் தேவர்கள் மானசரோவரில் இறங்குவார்களாமே? தங்கமயமான அன்னங்கள் திரியுமாமே? பார்த்தாயா?’ என்பன போன்ற கேள்விகள் வீசப்பட்டன. அவற்றைப் பார்ப்பது அந்தத் திருத்தலத்தின் சிறப்பே தவிர, அதில் நம் சிறப்பு என்பது எதுவும் இல்லை.
அனுபவம் என்பது நாம் பார்க்கிற ஒன்று இல்லை. அந்தக் காட்சியால் நம் ஆழ்மனதில் ஏற்படும் தாக்கமே அனுபவம். அனுபவம் என்றால் ‘உடன் (அல்லது) தொடர் நிகழ்வு’ என்று பொருள். எனவே, தொடர்ந்து நம் மனதில் நிலைக்கும் படிப்பினை அல்லது பாடமே அனுபவம். அப்படிப் பார்த்தால், என் அனுபவம் என்னவாக இருந்தது?
சுவாசம்கூடக் குன்றிய நிலையில் மலைவடிவில் புடைத்தெழுந்த அந்த மகாதேவனைப் பார்த்தபோது, நாம் ஒன்றுமே இல்லை, உள்ளதெல்லாம் அவனே என்பது உறைத்தது. ஆண்டுகள் சென்றாலும் அந்த நினைப்பு தொடர்கிறது.