திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் உள்பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புக் கம்பிகள். (உள்படம்) சனீஸ்வர பகவான்.படம்: வீ.தமிழன்பன் 
ஆன்மிகம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் டிச. 20-ம் தேதி சனிப் பெயர்ச்சி விழா: கட்டண தரிசனத்துக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்

செய்திப்பிரிவு

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள சனிப் பெயர்ச்சி விழாவையொட்டி, கட்டண தரிசனத்துக்கான ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் 20-ம்தேதி சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

அன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி, கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோயில் நிர்வாகம், காரைக்கால் மாவட்ட நிர்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட காவல் துறை சார்பில் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நளன் குளத்தில் படகுகளுடன் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கெனவே 250 நிரந்தரக் கழிப்பறைகள் உள்ளநிலையில், கோயிலைச் சுற்றியுள்ள பகுதி உட்பட பல்வேறு இடங்களில் 120 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க கோயில் வளாகம், திருநள்ளாறு காவல் நிலையம் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்துக்கான வரிசை வளாகங்கள், கோயில் பிரகாரம், வெளிப்பகுதி, முகப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் குறிப்பிட்ட இடங்களில்பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சுவாமி தரிசனம் செய்ய ரூ.300, ரூ.600, ரூ.1,000 ஆகிய கட்டண தரிசனங்களுக்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இலவச பேருந்து: சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்கால் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், சந்தை திடல், வேளாண் கல்லூரி, செல்லூர் விஐபி நகர், அத்திப்படுகை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து வரும் 19,20-ம் தேதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் 20 இலவச பேருந்துகள் திருநள்ளாறுக்கு இயக்கப்பட உள்ளன என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கேவிவி.பிரபாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக இலவச இ-ஆட்டோ சேவை, முழுநேர ஆம்புலன்ஸ் சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா, கேரளாமாநிலங்களிலிருந்து காரைக்காலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க, அந்தந்த மாநிலங்களிடம் ஏற்கெனவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT