தூத்துக்குடி: உடன்குடி அருகே தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் கள்ளர்வெட்டுத் திருவிழா நவம்பர் 17-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் அய்யன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர்வெட்டு வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் 108 பால்குடம் எடுத்து வருதல், தீர்த்தம் கொண்டு வருதல்,முளைப்பாரி எடுத்து வருதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலையில் கோயில் பின்புறமுள்ள தேரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கள்ளர்வெட்டு வைபவம் நடந்தது.
தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்ட மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் பகவதி, தக்கார் தமிழ்செல்வி, செயல் அலுவலர் காந்திமதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.