ஆன்மிகம்

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைண்ட ஏகாதசி பெருவிழா இன்று (டிச.12) தொடங்குகிறது. இதையொட்டி இன்று இரவு 7 மணிக்கு கர்ப்பகிரகத்தில் திருநெடுந்தாண்டகம் நடை பெறும். தொடர்ந்து, இரவு 7.45 மணிக்கு சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம், அபிநயம், வியாக்யானம் ஆகியவையும், இரவு 9 மணிக்கு திருப்பணியாரம் அமுது செய்தல், 9.30 மணிக்கு கோஷ்டி, 10 மணிக்கு திருவாராதனம், இரவு 10.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பலங்காரம், இரவு 11 மணிக்கு தீர்த்த கோஷ்டி ஆகியவையும் நடைபெறும். முன்னதாக, மூலஸ்தானத்தில் இன்று காலை 6 மணி முதல் 7.15 மணி வரை விஸ்வரூப தரிசனம் நடைபெறும். காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பக்தர்கள் சேவைக்கு அனுமதிக்கப்படுவர்.

மூலஸ்தான சேவை அனுமதியில்லை: காலை 7.15 முதல் 9 மணி வரையிலும், பகல் 12.30 முதல் பிற்பகல்2 மணி வரையிலும் பூஜைகள் நடைபெறும். இந்த நேரங்களில் சேவைக்கு பக்தர்கள் அனுமதியில்லை. இதேபோல, மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு பக்தர்கள் அனுமதிக் கப்படமாட்டார்கள். திருநெடுந்தாண்டகத்தைத் தொடர்ந்து பகல் பத்து திருநாள் நாளை (டிச.13) தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிச.23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்காக ஆயிரங்கால் மண்டபம் மற்றும் திருமாமணி மண்டபம், மணல்வெளி உள்ளிட்ட இடங்களில் பந்தல் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துள் ளனர்.

SCROLL FOR NEXT