ஆன்மிகம்

தெய்வத்தின் குரல்: புராதன நூல்களில் அறிவியல்

செய்திப்பிரிவு

ராஹமிஹிரர் ‘ப்ருஹத் ஸம்ஹிதை’ என்று ஒரு கிரந்தம் எழுதியிருக்கிறார். அதில் இல்லாத விஞ்ஞானக் கண்டுபிடிப்பு இல்லை.

வெறும் ஆகாசத்தில் இந்தக் கிரஹங்களெல்லாம் இருக்கின்றனவே. விழாமல் எப்படி நிற்கின்றன? இதற்குக் காரணத்தை நியூட்டன் என்பவர்தாம் கண்டுபிடித்தார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். மிகப் பழைய காலத்தில் உண்டான சூரிய சித்தாந்தத்தின் ஆரம்பத்தில் இருக்கிற சுலோகமே, பூமி விழாமல் இருப்பதற்கு ஆகர்ஷண சக்தி காரணம் என்று சொல்லுகிறது.

நம் பகவத்பாதாளின் உபநிஷத் பாஷ்யத்திலும் பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வஸ்துவை நாம் மேலே வீசி எறிந்தால் அது மறுபடியும் கீழே வந்து விழுகிறது. அப்படி விழுவது அதனுடைய ஸ்வபாவ குணம் அல்ல. அது பூமியில் விழுவதற்குக் காரணம் பூமியின் ஆகர்ஷண சக்தியே. ஆகர்ஷண சக்தி யென்றால் இழுக்கும் சக்தி என்பது அர்த்தம்.

பிராணன் மேலே போகும். அபானன் அதைக் கீழே இழுக்கிறது. ஆகவே, கீழே இழுக்கிற சக்திக்கு அபானசக்தி என்று பெயர். ஸ்ரீஆசார்யரவர்கள் பிருதிவிக்கு அபான சக்தி, அதாவது ஆகர்ஷண சக்தி, இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள். நமக்கு எவ்வளவோ காலம் பிற்பட்டு எழுதியவற்றுக்கு அளவில்லாத கௌரவத்தைக் கொடுக்கிறோம்.

இப்பொழுது எவ்வளவு விதமான கணக்குகள் லோகத்தில் இருக்கின்றனவோ அவ்வளவு கணக்குகளும் எவ்வளவோ வருஷங்களுக்கு முன்பே உண்டான நம்முடைய ஜ்யோதிஷ சாஸ்திரங்களில் இருக்கின்றன.

ஸ்ருஷ்டி தொடக்கமான கல்பாரம்பத்தில் எல்லா கிரகங்களும் ஒரே நேராக இருந்தன. அப்புறம் காலம் ஆக ஆக அவை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகின்றன. மற்றொரு கல்பாரம்பத்தில் மறுபடியும் நேராக வந்துவிடும்.

நாம் செய்யும் கர்மாக்களில் முதலில் சொல்லும் சங்கல்பத்தில் பிரபஞ்ச வர்ணனை, கால அளவை என்றெல்லாம் சொல்லப்படுகிற அவ்வளவும் ஜ்யோதிஷ விஷயந்தான்.

பூ ஆகர்ஷணம் மட்டுமில்லை, பூமி சுற்றுவதையும்கூட ஆர்யபட்டர், வராஹமிஹிரர் முதலானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ‘பூமிதான் நம் பிரபஞ்சத்துக்கு மத்தியாக நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. சூரியனே அதைச் சுற்றி வருகிறான். அதனால்தான் இரவு பகல் உண்டாயிருக்கின்றன’ என்றே மேல் நாட்டுக்காரர்கள் பதினாறாம் நூற்றாண்டுவரை நினைத்து வந்தார்கள்.

இதற்குக் கொஞ்சம் மாறாக யாராவது ஆராய்ச்சி பண்ணிச் சொன்னால், அவரை மதகுருமார்கள் stake என்ற கம்பத்தில் கட்டி நெருப்பை வைத்துக் கொளுத்தினார்கள்! ஆனால் ரொம்பவும் பூர்வ காலத்திலேயே நமக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது, சூரியன் பூமியைச் சுற்றுவதில்லை என்பதற்கு, ஆர்யபட்டர் ரொம்ப அழகாக ஒரு பேர் கொடுத்திருக்கிறார். அதற்கு ‘லாகவ – கௌரவ நியாயம்’ என்று பேர். லகு என்றால் லேசானது, சின்னது என்று அர்த்தம். ‘லகு’வைக் குறிப்பது ‘லாகவம்’. நம் பிரபஞ்சத்தில் (solar system -லே) பெரியது, குருவானது சூரியன்தான்; லகு பூமி. குருவைத்தான் சிஷ்யன் பிரதக்ஷிணம் செய்வான். இதுவே ‘லாகவ-கௌரவ நியாயம்’! இதன்படி பூமிதான் சூரியனைச் சுற்ற வேண்டும். இப்படிப் பிரபஞ்சத்தை குரு – சிஷ்யக் கிரமமாகப் பார்த்து சாஸ்திரமாகவும் சயின்ஸாகவும் ஆர்யபட்டர் சொல்லி இருக்கிறார். வாஸ்தவத்தில் அத்தனை சயின்ஸீம் நம் சாஸ்திரங்களிலே இருக்கின்றன.

சூரியன் இருந்தபடிதான் இருக்கிறது. பூமிதான் அதைச் சுற்றி வருகிறது. பூமி சுற்றுவதால்தான் சூரியன் உதிப்பதாகவும் அஸ்தமிப்பதாகவும் தோன்றுகிறதே அன்றி வாஸ்தவத்தில் சூரியன் பூமியின் கிழக்கே தினம் தினம் உதித்து அப்புறம் மேற்கே நகர்ந்து கொண்டே போய் அஸ்தமிக்கவில்லை என்ற விஷயம் ரிக்வேதத்திலுள்ள ஐதரேய பிராம்மணத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. “சூரியன் உதிப்பதும் இல்லை; அஸ்தமிப்பதும் இல்லை” என்று அதிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறது

பூமி சுற்றுகிற விஷயம் வித்வான்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்த விஷயம் என்பதற்குத் திருமலை நாயக்கரிடம் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதரின், ‘சிவோத்கர்ஷ மஞ்ஜரி’யில் ஆதாரம் இருக்கிறது. ‘பூமிர் ப்ராமயதி’ என்றே இதில் கடைசி சுலோகம் ஆரம்பிக்கிறது. அந்த ஸ்லோகத்திலிருந்து, நீலகண்ட தீக்ஷிதருக்குப் பெரிய பாட்டனாரான அப்பய தீக்ஷிதருக்கும் பூமி சுற்றும் விஷயம் தெரியும் என்பது தெரிகிறது.

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

SCROLL FOR NEXT