திருப்பள்ளியெழுச்சி
அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !
அதாவது, "அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, மிகவும் எளியது" என அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை என்கிறார் மாணிக்கவாசகர்.
அப்படிப்பட்ட தாங்கள், "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம். இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று கூறத்தக்க எளியமுறையில், எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர்!
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே! திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை? அதன்படியே நடப்போம்! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர் !
(ஆறு - வழி).
இந்தப் பாடலை, மார்கழி என்றில்லாமல் எல்லா நாளும் பாடுங்கள். அந்தப் பரம்பொருள், நம்மைக் காத்தருள்வார்.