ஐயப்பன் சன்னிதானம் 
ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில்மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதிநடை திறக்கப்பட்டது. மறுநாள் மண்டல பூஜை தொடங்கியது. இந்நிலையில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கிறனர். வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தரிசன நேரத்தை 16 நேரமாக அதிகாரிகள் அதிகரித்துள்ளனர்.

அதன்படி அதிகாலை 3 மணிக்குநடை திறக்கப்பட்டவுடன் சுப்ரபாதசேவை மற்றும் நெய்யபிஷேகத்திற்கு பிறகு மதியம் 1 மணி வரை பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்யலாம். பிறகு மாலை 4 மணி முதல் இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாராயணத்துடன் நடை அடைக்கப்படும் வரை பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க முடியும்.

இரவில் சன்னதி மூடப்பட்ட பிறகும் பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்காமல் ஐயப்பனை தரிசிக்க முடியும். இந்த தரிசன நேர அதிகரிப்பு நிம்மதி அளிப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT