திருக்கல்யாணத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனாவுடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள்பாலித்தார். 
ஆன்மிகம்

மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சுப. ஜனநாயகசெல்வம்

மதுரை: மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 7-ம் நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மதுரை அழகர்கோவில் மலைமேலுள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.13-ல் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை நடைபெற்றது. அன்னம், காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, சப்பரம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு கோயில் உள் பிரகாரத்தில் எழுந்தருளினர். முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது.

விழாவின் 7-ம் நாளான இன்று காலை 11.15 மணியளவில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தேவசேனா ஆகியோருக்கும் திருக்கல்யாணம் உற்சவர் சன்னதியில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது.

இன்று மாலை 5 மணியளவில் ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்தனர்.

SCROLL FOR NEXT