திருப்பதி: திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை கார்த்திகை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியதை முன்னிட்டு, கோயிலுக்கு ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி தம்பதியினர் தாயாருக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை கோயில் தங்க கொடி மரத்தில் வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, மேள, தாளங்களுடன் அர்ச்சகர்கள் யானை சின்ன கொடியை ஏற்றினர். இதில், தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, இணை நிர்வாக அதிகாரிகள் வீரபிரம்மம், சதா பார்கவி மற்றும் பலர் பங்கேற்றனர்.
தாயார் பவனி: கார்த்திகை மாத பிரம்மோற்சவ கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடந்து முடிந்த பின்னர், நேற்று இரவு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை வழிப்பட்டனர். 2-ம் நாளான இன்று கார்த்திகை பிரம்மோற்சவத்தில், காலை பெரிய சேஷ வாகன சேவையும், இரவு அன்ன வாகன சேவையும் நடைபெற உள்ளது.