ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள்

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவ நிறைவு நாளையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 1-ம் தேதி ஊஞ்சல் உற்சவம்தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவ நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் கோயில் கொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

உற்சவத்தின் 7-ம் நாளான நவ. 7-ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார். தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம்நடைபெற்றது. உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார்.

மாலை 6 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளி, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை இணை ஆணையர் செ.மாரியப்பன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT