தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை சிறப்பாக நடத்த, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 29 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி மாலை 4 மணிக்கு மேல் கோயில் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன. கந்த சஷ்டி விழாவை சிறப்பாக நடத்த 29 சிறப்பு பணி அலுவலர்களை இந்து சமய அறநிலையத் துறை நியமித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.வீ.முரளீதரன் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, பக்தர்கள் வருகையை சீர்படுத்தவும், தரிசன முறைகளை நெறிப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிக மேற்கொள்ளவும், மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 29 பேரை சிறப்பு பணி அலுவலர்களாக, 15.11.2023 முதல் 19.11.2023 வரை நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி, மதுரை, சிவங்கை, திருநெல்வேலி மண்டலங் களில் உள்ள ஆய்வர்கள் மற்றும் செயல் அலுவலர்களை ( மண்டலங்களில் திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோயில்களை அனுசரித்து ), திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் சிறப்பு பணிபுரிய மண்டல இணை ஆணையர்கள் உத்தரவு பிறப்பித்து, அதன் நகலை திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சிறப்பு பணி அலுவலர்கள் பணிக்கு வரும் போது உடன் வாக்கி டாக்கியை தவறாமல் கொண்டு வர வேண்டும். தங்களுடன் தங்கள் அலுவலக பணியாளர் இருவரை உடன் அழைத்து வரவும் வேண்டும்.
மேலும், இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள சிறப்பு பணி அலுவலர்கள் மற்றும் மண்டல இணை ஆணையர்கள் மூலம் பெறப்படும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் ஆகியோருக்கு உரிய பணியை ஒதுக்கீடு செய்து, சுழற்சி முறையில் பணியமர்த்திட திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.