சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உள்ள முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்கள் . படம்: எஸ்.சத்தியசீலன் 
ஆன்மிகம்

கல்லறை திருநாளையொட்டி ஆலயங்களில் சிறப்பு ஆராதனை

செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவ. 2-ம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். இது கல்லறை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் இறந்த மூதாதையர், பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, வண்ணங்கள் பூசி குடும்பத்தோடு சென்று ஜெபம் செய்வார்கள். இறந்தோருக்கு பிடித்தமான உணவுகளை அவர்கள் நினைவாக ஏழை மக்களுக்கு வழங்குவார்கள். மேலும் கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஆராதனை, சிறப்பு திருப்பலி நடைபெறுவதும் வழக்கம்.

அந்த வகையில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று காலை மற்றும் மாலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆலயங்களுக்கு உட்பட்ட கல்லறை தோட்டத்துக்கு பாதிரியார்கள் சென்று இறந்தவர்களுக்காக ஜெபம் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் எதிரேயுள்ள செயின்ட் மேரீஸ் கல்லறை தோட்டம், கீழ்ப்பாக்கம் கல் லறை தோட்டம், சாந்தோம் கியூபிள் ஐலேண்ட் கல்லறை தோட்டம் உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை வரை ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் வருகை தந்து உறவினர்களின் கல்லறைகளில் ஜெபம் செய்தனர்.

SCROLL FOR NEXT