திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகிஷாசூரனை ஆயிரthதம்மன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டையில் தசரா விழா கடந்த 14-ம் தேதி பிரதான கோயிலான ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. பாளையங்கோட்டையிலுள்ள முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், வடக்கு உச்சிமாகாளி அம்மன், விஸ்வகர்ம உச்சினி மாகாளியம்மன்,
கிழக்கு உச்சினி மாகாளியம்மன், ஸ்ரீதேவி உச்சினி மாகாளியம்மன், தூத்துவாரி அம்மன், உலகம்மன், புது உலகம்மன் ஆகிய கோயில்களில் துர்கா பூஜையுடன் தசரா திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், அம்மன் கொலுவில் வீற்றிருக்கும் வைபவமும் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் திடலில் நேற்று முன்தினம் காலையிலும், ராஜ கோபால சுவாமி கோயில் திடலில் நேற்று முன்தினம் மாலையிலும் 11 அம்மன் சப்பரங்களும் அணி வகுத்து காட்சி கொடுத்தன. பின்னர் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து நள்ளிரவில் பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகேயுள்ள எருமைக் கிடா மைதானத்தில் மாரியம்மன் கோயில் முன் நள்ளிரவில் 11 அம்மன்களும் அணிவகுத்து நிற்க, மகிஷா சூரனை ஆயிரத்தம்மன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தீர்த்த வாரியுடன் விழா நேற்று நிறைவடைந்தது.