படம்: எல்.பாலச்சந்தர் 
ஆன்மிகம்

ராமநாதபுரம் அரண்மனையில் ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சி - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நவராத்திரி இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்களின் அரண்மனை வளாகத்தில அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக தசரா நிகழ்ச்சி கொலு வைத்தும், அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிரேஷக ஆராதனைகளும் நடைபெற்றன. கடந்த 9 நாட்களும் அரண்மனை வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், பொம்மலாட்டம், இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற்றன.

பத்தாம் நாளான நேற்று முன்தினம் இரவு விஜயதசமி அன்று அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் மற்றும் நகரில் உள்ள கோட்டைவாசல் விநாயகர், வனசங்கரி அம்மன், மீனாட்சி சொக்கநாதர், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, வழிவிடு முருகன், பிள்ளை காளியம்மன், முத்தாலம்மன், கன்னிகா பரமேஸ்வரி,

பெரிய மாரியம்மன் உள்ளிட்ட நகரில் உள்ள 26 கோயில்களிலிருந்து சுவாமி, அம்மன்கள், ஊர்வலகமாக அரண்மனை முன்பு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து நகரில் ஊர்வலமாக சென்று கேணிக்கரை பகுதியில் உள்ள மகர் நோன்பு திடலை சென்றடைந்தது. அங்கு நள்ளிரவில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரமர்த்தனி திருக்கோலத்தில் மகர்நோன்பு திடலில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் அபர்ணா நாச்சியார், இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அம்பு எய்தல் மூலம் நாட்டில் மழை பொழிந்து ஊர் செழிக்கும் என்பது ஐதீகம். குருக்கள் விட்ட அம்பை மக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். ராமநாதபுரம் நகர் டிஎஸ்பி ராஜா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT