நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் மகாதானபுரத்துக்கு பரிவேட்டைக்காக ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன்கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வாகன பவனி போன்றவைநடைபெற்றன. விஜய தசமி நாளான நேற்று அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி பகவதியம்மன் பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டார்.
அப்போது போலீஸார் துப்பாக்கி ஏந்தி நின்று அணி வகுப்பு மரியாதை அளித்தனர். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மேயர் மகேஷ், அறநிலையத் துறை இணை ஆணையர் ரத்ன வேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான கலைஞர்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் ஊர்வலத்தில் நடைபெற்றன. நேற்று மாலையில் மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்தை அம்பாள் சென்றடைந்தார். அங்கு பாணாசூரனை அம்புகள் எய்து பகவதி அம்மன் அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மின்னொளியில் வாணவேடிக்கை நடைபெற்றது.
பின்னர் மகாதானபுரம் நவநீதசந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோயிலுக்கு பகவதி அம்மன் எழுந்தருள, அங்கு அம்மனுக்கும், நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர்.
மகாதானபுரம் சந்திப்பில் உள்ள காரியக்காரன் மடத்தில் வெள்ளி பல்லக்கில் பகவதியம்மன் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி பவனியாக புறப்பட்டார். அங்கு வந்தடைந்ததும் முக்கடல் சங்கமத்தில் நள்ளிரவில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது. பின்னர் கிழக்கு வாசல் வழியாக நள்ளிரவில் கோயிலுக்குள் அம்மன் பிரவேசித்தார். பரிவேட்டை நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.