ஆன்மிகம்

குலசேகரன்பட்டினத்தில் குவியும் வேடமணிந்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 24-ம் தேதி இரவு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் த்ற்போது முதலே அங்கு குவிந்து வருகின்றனர்.

குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் உடனுறை ஞான மூர்த்தீஸ்வரர் கோயிலில் தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. விரதம் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தனியாகவும், குழுவாகவும் பல்வேறு வேடங்களை தரித்து வீதி, வீதியாகச் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர். விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

7-வது நாளான நேற்று பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா வந்தார். மகிஷாசூரசம்ஹாரத்துக்கு 3 நாட்களே உள்ள நிலையில் காளி, குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் குழுக்களாக சென்று உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாடல்கள் பாடி காணிக்கை வசூலிக்கின்றனர். வேடமணிந்த பக்தர்கள் நேற்று முதலே குலசேகரன்பட்டினத்தில் குவியத் தொடங்கி உள்ளனர். இதையொட்டி போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT