ஆன்மிகம்

தவழும் விநாயகர், உறியுடன் கிருஷ்ணர்: வீடுகளை அலங்கரிக்க விதவிதமான பொம்மைகள்!

செய்திப்பிரிவு

தூத்துக்குடி/ கோவில்பட்டி: நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கொலு பொம்மைகள் விற்பனை விறு விறுப்படைந்துள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை 9 நாட்கள் இவ்விழா நடைபெறவுள்ளது. நவராத்திரி விழாவையொட்டி இந்துக்கள் தங்கள் வீடுகளில் 9 நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கொலு பொம்மை சிறப்பு கண்காட்சி விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு பல வண்ணங்களில், வித விதமாக ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மக்களும் ஆர்வமுடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து கொலு பொம்மைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்யும் தூத்துக்குடியை சேர்ந்த பெரியசாமி கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், காஞ்சிபுரம், பண்ருட்டி, கடலூர் போன்ற பகுதிகளில் உள்ள கைவினை கலைஞர்களிடம் இருந்து கொலு பொம்மைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். ரூ.5 முதல் ரூ.2,000 விலையில் 5 அங்குல உயரம் முதல் 5 அடி உயரம் வரை உள்ள பொம்மைகள் இருக்கின்றன.

மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணா மூர்த்தி, அன்னபூரணி உள்ளிட்ட கடவுள்களின் பொம்மைகள், சீனிவாசர் திருக்கல்யாணம், ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், கீதை உபதேசம், சபரிமலை, கைலாய பார்வதம், 18 சித்தர்கள், மகாபிரதோஷம், ஆழ்வார்கள், லலிதாம்பிகை செட், பஜனை செட் போன்ற 47 வகையான பொம்மை செட்கள் விற்பனைக்காக வந்துள்ளன.

மக்கள் ஆர்வமுடன் கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. விற்பனை நன்றாக இருக்கிறது என்றார்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள கொலு பொம்மை விற்பனை கடைகளில் இந்த ஆண்டு புதுவரவாக தவழும் விநாயகர், முருகன் மற்றும் உறியுடன் கூடிய கிருஷ்ணர் பொம்மைகள் ரூ.300 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

3 அடி உயரம் உள்ள பாவை விளக்கு ஒரு ஜோடி ரூ.11 ஆயிரத்துக்கும், 2 அடி உயரமுள்ள துர்க்கை அம்மன் சிலை ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT