மானாமதுரை: மானாமதுரையில் எல்லை பிடாரி அம்மனுக்கு தீப்பந்தம் ஏற்றி, மண்சட்டியில் கறிச்சோறு படையல் வைத்து வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே எல்லை பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் செவ்வாய் சாட்டு உற்சவ விழா நடைபெறும். அதன்படி அக். 3-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. கிருஷ்ணராஜபுரம் மக்கள் காப்புக் கட்டி விரதம் இருந்தனர்.
விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, செவ்வாய் சாட்டு உற்சவத்தையொட்டி கிருஷ்ண ராஜபுரம் மக்கள் தங்கள் வீடுகளில் அசைவ உணவுகள், கொழுக்கட்டை, பணியாரம் ஆகியவற்றை சமைத்தனர். அவற்றை மண் சட்டிகளில் வைத்து, அதன் மீது தீப்பந்தம் ஏற்றினர்.
பின்னர் அவற்றை குறத்தி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து, அங்கிருந்து பெண்கள் மேளதாளம், வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக எல்லை பிடாரி அம்மன் கோயிலுக்கு எடுத்து வந்தனர். அவற்றை அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி, மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.