நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நேற்று நடைபெற்றது. தமிழக, கேரள போலீஸார் அணிவகுப்பு மரியாதையுடன் அனுப்பி வைத்தனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்த போது அதன் தலைநகராக தக்கலை அருகே உள்ள பத்மநாதபுரம் இருந்து வந்தது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக இதன் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.
அதன் பின்பு நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் முன்னூதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள சரஸ்வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்ரகங்கள் இங்கிருந்து ஊர்வலமாக, மேளதாளங்கள் முழங்க திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
நடப்பாண்டு நவராத்திரி விழா 15-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, சுசீந்திரம் கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மேளதாளங்கள் முழங்க புறப்பட்டார். அப்போது தமிழக, கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்ட அம்மனை, வழிநெடுகிலும் பக்தர்கள் மலர்தூவி வழியனுப்பினர்.
நிகழ்ச்சியி்ல் நாகர்கோவில் மேயர் மகேஷ், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி: முன்னுதித்த நங்கை அம்மன் சுவாமி விக்ரகம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு நேற்று மாலை வந்து சேர்ந்தது. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து இன்று மூன்று சுவாமி விக்கிரகங்களும் பிரம்மாண்ட ஊர்வலத்துடன் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கின்றன.
முன்னதாக பத்மநாபபுரம் அரண்மனையி்ல இன்று நடைபெறும் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் தமிழக, கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.