திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வலம் வரும் வாகனங்களை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவ. 14-ம் தேதி இரவு தொடங்குகிறது. பின்னர், அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் நவ. 17-ம் தேதி காலை கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.
காலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி மாட வீதியில் வலம் வரவுள்ளனர். முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நவ. 26-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளன. இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழா பணிகளை மேற்கொள்ள, ராஜகோபுரம் அருகே கடந்த செப். 21-ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது.
இதையடுத்து, பஞ்சமூர்த்திகள் வலம் வரும் வாகனங்களை சீரமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடை பெறுகிறது. மூஷிக வாகனம், நாக வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்து, வர்ணம் பூசப்படுகிறது. இப்பணிகளை தொடர்ந்து, தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் உட்பட 5 ரதங்களை சீரமைக்கும் பணியில் பொறியியல் வல்லுநர்கள் ஈடுபடவுள்ளனர்.